24.6.10

மையம்



கவிதை உயிர்க்கிறது
ஒரு புதிருக்கும் ஒரு விடைக்கும் நடுவில்.
கனவு ஒழுகுகிறது
ஒரு நேற்றுக்கும் ஒரு நாளைக்கும் மத்தியில்.
முத்தம் உதிர்கிறது
ஒரு பரிவிற்கும் ஒரு கசிவிற்கும் இடையே.
மொழி பிறக்கிறது
ஒரு சமிக்ஞைக்கும் ஒரு சப்தத்துக்கும் மையத்தில்.
இசை தவிக்கிறது
ஒரு தந்திக்கும் ஒரு விரலுக்கும் இடையில்.
நதி நகர்கிறது
ஒரு இதிகாசத்துக்கும் மற்றொன்றிற்கும் நடுவில்.
வேடிக்கை பார்க்கிறது வாழ்வு
ஒரு மூச்சிற்கும் மற்றொன்றிற்குமுள்ள
இடைவெளியில்.

8 கருத்துகள்:

Chitra சொன்னது…

மொழி பிறக்கிறது
ஒரு சமிக்ஞைக்கும்
ஒரு சப்தத்துக்கும்
மையத்தில்.


..... wow! அருமையான கவிதை - ஆழமான அர்த்தங்களுடன்! பாராட்டுக்கள்!

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி....எல்லா செயல்களுக்குமே இரு விசைகள் தேவைப்படுகிறது.
அழகாக அடுக்கியிருக்கிறீர்கள்.

வாழ்வு ஒரு பக்கம் மூச்சென்றால் மற்றதும் அதே மூச்சுத்தானே !

santhanakrishnan சொன்னது…

இசை தவிக்கிறது
ஒரு தந்திக்கும்
ஒரு விரலுக்கும்
இடையில்..

மிக நுட்பமான வரிகள் சுந்தர்ஜி.
கொடி கட்டி பறக்கிறது உங்கள் கவிதை.

மதுமிதா.
இதிலும் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சித்ரா-முதல் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும்.

நன்றி ஹேமா.

நன்றி மதுமிதா.கமலேஷ் தோழி தோழி என்று சொல்லி வேறு ஒரு ப்ளாக் ஆரம்பிக்கவைத்துவிட்டாரோ? வாழ்த்துக்கள்.

பத்மா சொன்னது…

எப்போதுமோ middling தான் charming

Anonymous சொன்னது…

கவிதை-கனவு-முத்தம்-மொழி-இசை-நதி-வாழ்வு....பரமானந்தத்தில் கரைக்கிறதென்னை வரிகள் சுந்தர்ஜி ஸார்.

என்னை அசைத்துப் பார்த்த கவிதை.

-ப.தியாகு

Anonymous சொன்னது…

தத்துவத்தின் பிணைப்பாய் வரிகளின் அடுக்குகள் உயிர்க்கிற கவிதை தொடங்கி வேடிக்கை பார்க்கிற வாழ்க்கை வரை. இசை தவிக்கிற வரியையும் நதி நகர்கிற வரியையும் கவிதையின் உச்ச அழகாய் சிலாகிக்கிறேன்.ஒருவரின் தரிசனம் மற்றொருவருக்கு சிறகு விரிக்கும் பறத்தலைத் தருகிறது என்பதை நிரூபிக்கிறீர்கள்.பெருகட்டும் எல்லாம்.
-உஷா.

Anonymous சொன்னது…

நுட்பமான இடைவெளிகளை அழகாய் நிரப்பியது இக்கவிதை. நடுவில் சிக்கிக் கொண்டது மனசு.
-ஜே.ஃப்ராங்ளின்குமார்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...