16.9.10

மைதானம்


சுண்டும் விரலுக்கும்
நாணயத்தின் முகத்திற்கும்
நடுவே தீட்டப்படுகிறது
சவால்களின் கூர்.

சலனப்படுத்துகிறது
இலக்கை நோக்கிய
பாதையின் நடுவே
குறுக்கு வழியின்
ஆரவாரம்.

உதிரும் காலத்தின்
செதில்களில்
மறைந்திருக்கிறது
அடைய இருக்கிற முடிவு.

ஓடும் கால்களைத்
துவள வைக்கிறது
சுமக்கும் பொறாமையின்
கொடும் பொதி.

அடைந்ததும்
அடையாததும்
பெருங்கனவாய் நீள
சொட்டித் தீர்கிறது
காலத்தின் கானல் நீர்.

பெருமைக்கும்
அவமானத்துக்கும்
இடைப்பட்ட சதுரத்தை
உழுகிறது இலக்குகளின் ஏர்.

வியர்வையில் நனைத்த
போர்வை கொண்டு
வெற்றியும்
தோல்வியும்
சமமாய் மூடுகிறது
மைதானத்தின்
நிர்வாணத்தை.

6 கருத்துகள்:

சைக்கிள் சொன்னது…

மைதானம் - நல்ல குறிப்பீடு. சந்தோஷமாக இருக்கிறது.

vasan சொன்னது…

குறுக்கு வ‌ழிக‌ள் கும்மாள‌மிட்டாலும், தோல்வியும் வெற்றியும் கூடி வந்தாலும் இறுதியில் ச‌ம‌னாக்கி விடுகிற‌து மைதான‌ம். விஞ்சி நிற்கிற‌து வ‌ழித்த‌ட‌ம் எச்ச‌த்தால்.

தமிழ் உதயம் சொன்னது…

போட்டி, பொறாமை, மோதல், சவால்...
மைதானம் பார்ப்பது இறுதியில் என்ன.
அழகாக முடிக்கப்பட்டுள்ளது கவிதை.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சைக்கிள்.சந்தோஷம் எனக்கும்.

நன்றி வாசன்.மைதானம் நிறைய கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது எனக்கும்.

முதல் வரவுக்கும், முதல்தர ரசனைக்கும் ஒரு நன்றி தமிழ் உதயம்.

ஹேமா சொன்னது…

வாழ்வே விளையாட்டாகி,வாழ்வியல் போட்டியும் பொறாமையுமாகி மைதானத்தில் வரைந்த கவிதை அழகு சுந்தர்ஜி.

சுந்தர்ஜி சொன்னது…

பாராட்டுக்கு நன்றி ஹேமா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...