9.2.11

காலி அண்டா


சீனாவில் பழங்காலத்தில் கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பல குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த ஒருவர் அவர்களுக்குத் தகுந்த உணவு கொடுக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டார். அதனால் தன்னுடைய குழந்தைகளில் சிறுவனான ஒருவனைத் தேர்ந்தெடுத்து மடத்தில் சேர்த்து விடுவது என முடிவெடுத்தார்.

ஆனால் மடத்தில் வெகு சில சிறுவர்களையே உதவியாளர்களாகச் சேர்த்துக் கொள்வார்கள். தன்னுடைய பையனுடன் சென்ற தந்தை மடத்தின் தலைமைக் குருவைச் சந்தித்து, "நீங்கள் என்னுடைய பையனை உங்களுடைய உதவிக்காக மடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்குக் கைமாறாக என்னுடைய பையன் கடினமான பணிகளைச் செய்வான். துறவிகளை மதித்து நடப்பான். அதனால் தயவுசெய்து அவனை உங்கள் மடத்தில் சேர்த்துக் கொண்டு அடைக்கலம் தரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

பல ஏழைக் குடும்பங்கள் இருந்ததால் அனைவரும் தங்களுடைய குழந்தையை மடத்தில் சேர்ப்பதற்கு விரும்புவார்கள். ஆனால் அனைவரையும் ஏற்றுக் கொண்டு மடத்தில் தங்க வைப்பதோ, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதோ சிரமமான காரியம் என்பதால் பல சிறுவர்களை ஏற்றுக் கொள்ள மடத்தில் மறுத்து விடுவார்கள்.

ஆனால் அதிர்ஷ்ட வசமாக இந்தச் சிறுவனை சேர்த்துக் கொள்ள தலைமை குரு அனுமதி கொடுத்தார்.

துறவிகள் பையனிடம் ஒரு மேலங்கியைக் கொடுத்தனர். பையன் தன்னுடைய தந்தையையும், கிராமத்தில் தன்னுடைய குடும்பத்தையும், நண்பர்களையும் விட்டு விட்டு மடத்தில் சேர்ந்தான். சிவந்த மேலங்கியைத் தவிர அவனுக்கென்று வேறு எந்தப் பொருளும் அங்கு இல்லை.

ஒரு முதிய துறவி பையனிடம் வந்து தண்ணீர் கொதிக்க வைக்கும் பெரிய அண்டாவினைக் காட்டி, "அங்கே இருக்கும் அண்டாவினை எடுத்துக் கொள். அதில் தண்ணீரை நிரப்பி அருகில் இருக்கும் பெரிய பாறையின் மேல் வை" என்று அவனுக்கு வேலையை கொடுத்து விட்டு சென்று விட்டார்.

பையனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எதற்காகத் தண்ணீரை நிரப்பிப் பாறையின் மீது வைக்கச் சொல்லுகிறார்? வேலையைச் செய்ய மாட்டேன் என்று சொன்னால் என்ன செய்வார்கள்? சுற்றி எங்கேயும் தண்ணீரைக் கொதிக்க வைக்கும் அடுப்பும் இல்லை. இத்தனை குழப்பமான சிந்தனைகளுக்கு இடையேயும் துறவி சொன்னது போல் செய்து முடித்தான்.

கொஞ்ச நேரம் கழித்து அந்தப் பக்கம் வந்த முதிய துறவி, தன்னுடைய கைகளால் தெளிப்பது போல் பாவனை செய்துகாட்டி விட்டு, "நான் செய்தது போல் தண்ணீரை வெளியே உனது கைகளால் தெளி" என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

விநோதமான செயலாக சிறுவனுக்குப் பட்டாலும் துறவி கூறியது போல் செய்து முடித்தான். பாறை முழுவதும் தண்ணீரில் நனைந்திருந்தது. அண்டா வெற்று அண்டாவாகியது. அவனுடைய கைகளோ தண்ணீரைத் தெளித்துத் தெளித்து விறைத்துப் போய் இருந்தது.

கொஞ்சம் நேரம் போனபின் முதிய துறவி அவனிடம் வந்து "அண்டாவை மறுபடியும் நிரப்பு" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீரை நிரப்புவதும், தெளிப்பதுமாக இருந்தான். இது போல் ஒரு மாதம் முடிந்தது.

தன்னுடைய தந்தை மிகவும் தவறான முடிவெடுத்து விட்டார். இங்கு நான் எதையும் கற்கவும் இல்லை. ஒரே வேலையை-திரும்பத் திரும்ப-ஒரே வேலையையே செய்கிறேன்.என்ன வாழ்க்கை இது? என்று வருத்தமடைந்தான். ஆனால் தன் தந்தைதான் இங்கு சேர்த்தாரே தவிர துறவிகளைப் பற்றிக்குறை சொல்லுவதும் நல்லதில்லை என்று எண்ணி மனம் வருந்தினான்.

மூன்று மாதங்கள் சென்றிருக்கும்.பையனுக்கு விருப்பம் இருந்தால் தன்னுடைய ஊருக்குச் சென்று வரலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டது. அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்காவது இந்த அண்டாவினையும், தண்ணீர் தெளிப்பதினையும் விட்டு விட்டு ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டு சென்றான்.

வீட்டிற்கு சென்றதும் எல்லாரும் அவனைத் துளைக்க ஆரம்பித்தனர். "உனக்குப் பிடித்திருந்ததா? மிகவும் கடினமான வேலை கொடுத்தார்களா? உன்னுடைய கைகளால் மரப் பலகைகளை உடைத்தாயா? தியானம் பற்றி எதாவது சொன்னார்களா?".

பதில் சொல்லுவதற்கு அவனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவன் செய்ததெல்லாம் அண்டாவினை நிரப்புவதும் அதனைத் தெளித்து அண்டாவைக் காலியாக்குவதும்தான். வேறு ஒன்றும் செய்தானில்லை.ஒருவழியாக "இன்னும் நான் எதையும் கற்கவில்லை, இனிமேல் தான் கற்றுத்தர ஆரம்பிப்பார்கள்" என்று கூறினான். ஆனால் அனைவரும், "கண்டிப்பாக எதாவது சொல்லிக் கொடுத்து இருப்பார்கள், அதில் ஒன்றினை எங்களுக்குச் செய்து காட்டு" என்றார்கள்.

சிறுவனுக்கோ வருத்தமாகவும், கோபமாகவும் இருந்தது. கொஞ்சம் எரிச்சலுடன், "நான் எதையும் கற்கவில்லை" என்று பதில் கூறிவிட்டு பக்கத்திலிருந்த அடுப்பங்கரைக்கு சென்று விட்டான்.கொஞ்சம் நேரம் சென்றிருக்கும் பையனின் உறவினர் ஒருவர் அவனிடம் சென்று, "நீ எல்லாரிடம் சொல்ல முடியாது, அதனால் என்னிடம் மட்டும் சொல்லு" என்று அவனை பதில் கூற வற்புறுத்தினார்.

அவ்வளவு தான்.மிகவும் கோபம் அடைந்த சிறுவன் சத்தமாக "நான் எதையுமே கற்கவில்லை!" என்று கத்திவிட்டு, தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு குதித்து எழுந்தவன், எதிரே இருந்த மர இருக்கையை தன்னுடைய கைகளால் வேகமாகக் கோபத்துடன் ஒங்கி வேகமாக வெட்டினான். அந்த கனத்த மர இருக்கை கணப்பொழுதில் இரண்டாகப் பிளந்தது.அப்பொழுதுதான் பையனுக்கு தான் என்ன கற்றோம் என்பது புரிந்தது.
II
நம் வாழ்க்கையில் எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோருக்கும் பொருந்தும் பதில்களைத் தேடுகிறோம்.

மனதின் வண்ணங்கள் வேறு வேறாயிருக்கும்போது அவற்றின் கேள்விகளும் அவற்றிற்கான விடைகளும் வேறுவேறாய்த்தானே இருக்கமுடியும்.

தலைவலிக்கு வேறு மருந்தும் வயிற்றுவலிக்கு வேறு மருந்தும் இருப்பதைப் போல் அந்தச் சிறுவனின் தேடல் எதுவாயிருந்ததோ அதை அவன் கண்டுகொண்டான். நாம் அதைத் தேட அவசியமற்றிருப்பதால் நமக்கு ஒன்றிற்கும் மேலாய் பல விடைகள் கண்களுக்குப் புலப்படுகின்றன.

24 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஜென் கதைகள் பலவற்றில் ”ஏன், எதற்கு” என்று கேட்காமல் செய்யச்சொல்லிய வேலையை செய்வதன் பலன் பின்னர் அனுபவ ரீதியாய் சீடர்களுக்குப் புரியும்போது, நமக்கும் பல விஷயங்கள் புலப்படுவது அதன் பலம். சின்னச் சின்னதாய் நிறைய கதைகள் படித்திருந்தாலும் அத்தனையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை என்பதில் எனக்கு எப்போதுமே வருத்தம் உண்டு!

நல்ல கதை பகிர்வுக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி!

Ramani சொன்னது…

கூறாது கூறுதல்.மௌனத்தால் பேசுதல்
என்கின்ற சொற்றொடருக்கான
அர்த்தங்களை எல்லாம் இந்தக் கதை
மிக அழகாக விளக்கிப் போகிறது
நல்ல பதிவு.நன்றி

Matangi Mawley சொன்னது…

That was not only interesting-- but also intriguing and insightful. This kind of a thing, I have seen- is common when it comes to Zen philosophy or stories.

But I also feel- this is the practice that my parent followed too. I used to cry for hours, demanding for 'cable tv' at our home. i never had anything to talk to my friends about when they would say about latest shows on their TV. i had to be content with Doordharshan.
but now, i realize this gave me so much time to read, to learn music, to spend time with my parents but most importantly, to spend time on introspection. besides, Doordharshan back then, was a gem!

not only this- but many other things as well. and for that, i shall always remain in debt to them!

thank you for sharing this story, sir! it made me think of so many things...

VAI. GOPALAKRISHNAN சொன்னது…

அடடா.. அந்த ஏழைக் குடும்பத்திலிருந்த பெஞ்சைப் போய் உடைத்து விட்டானே !

ஆனால் நல்லாவே இருக்கு உங்களின் இந்தக் கதை.

VAI. GOPALAKRISHNAN சொன்னது…

அந்த சிஷ்யப் பையன் செய்த
”கைகள் அள்ளிய நீர் ....
கைகள் தெளித்த நீர் ...
காலி அண்டா”
பற்றிய இந்தக் கதைகள் நம் ரமணனுக்குத் தெரியுமா?

ராகவன் சொன்னது…

Anbu Sundarji,

Azhagaana pakirvu... padikka padikka niraiya thiravukolkal kidaikkiradhu...

anbudan
ragavan

வினோ சொன்னது…

பலரின் அனுபவங்ககள் பல நல்ல விசயங்களை கற்று கொடுக்கும்...

ஹேமா சொன்னது…

என்ன சுந்தர்ஜி...கோபத்தையா வேகத்தையா கற்றுக்கொண்டான் !

சுந்தர்ஜி சொன்னது…

ஹேமாவுக்கு மட்டும் முதலில் அவரின் கேள்விக்காக.

நம் வாழ்க்கையில் எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோருக்கும் பொருந்தும் பதில்களைத் தேடுகிறோம்.

மனதின் வண்ணங்கள் வேறு வேறாயிருக்கும்போது அவற்றின் கேள்விகளும் அவற்றிற்கான விடைகளும் வேறுவேறாய்த்தானே இருக்கமுடியும் ஹேமா.

தலைவலிக்கு வேறு மருந்தும் வயிற்றுவலிக்கு வேறு மருந்தும் இருப்பதைப் போல் அந்தச் சிறுவனின் தேடல் எதுவாயிருந்ததோ அதை அவன் கண்டுகொண்டான்.நாம் அதைத் தேட அவசியமற்றிருப்பதால் நமக்கு பல விடைகள் கண்களுக்குப் புலப்படுகின்றன.

எனக்குத் தெரிந்த வரை என் புரிதல் இப்படித்தான்.உங்களுக்கும் இது சரிதானே ஹேமா?

G.M Balasubramaniam சொன்னது…

IMPLICIT OBEDIENCE MUST HSVE PRODUCED UNEXPECTED RESULTS. GOOD PIECE, SIR.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொன்னது…

Very much informative post..!

சுந்தர்ஜி சொன்னது…

நம் நினைவில் கதைகள் நில்லாது போய்விட்டாலும் அது நம்மை அடைந்து நமக்குத் தந்த ஞானம் நம்மை வழி நடத்தும்.

என் கதையும் அப்படித்தான்.எராளமான கதைக்ளை மறந்துவிட்டேன். என் பாட்டி எனக்குச் சொன்ன விஷயங்களையெல்லாம் அருமை தெரியாமல் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டேன். என் அம்மாவிடம் அந்தக் கதைகளைச் சேமிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

நன்றி வெங்கட்.

சுந்தர்ஜி சொன்னது…

வரிகளுக்கிடையே வாசிப்பதும் மௌனத்தைப் புரிந்துகொள்தலும்தான் வாழ்க்கையின் முக்கியமான கற்றல் என என்னைப் போலவே இருக்கிறது உங்களின் சிந்தனையும்.

நன்றி ரமணி சார் ஒரு பொருட்டாய் என்னையும் தொடர்ந்து வாசிப்பதற்கு.

சுந்தர்ஜி சொன்னது…

சரியான கணிப்பு மாதங்கி.

என்னோட பாணியும் அப்படித்தான்.தவிர எல்லாக் கேள்விக்கும் பதில்கள் கிடையவும் கிடையாது.

தூர்தர்ஷனின் அருமை பற்றித் தனியாக ஒரு பதிவுக்கு எண்ணியுள்ளேன்.அதன் சாதகமான பாதிப்பு பற்றியும்.

சுந்தர்ஜி சொன்னது…

அவன் உடைத்தது பென்ச்சை மட்டுமல்ல கோபு சார்.

ரமணா அவன் பள்ளி ஆண்டுவிழா நாடக ஒத்திகையில் மும்முரமாக இருப்பதால் இந்தக் கதையைப் படிக்க நேரமில்லபா என்று கழற்றிவிட்டுவிட்டான்.

ஆனா ராத்திரி அவனுக்குப் பக்கத்தில் படுத்துக் கொண்டு இந்தக் கதையைச் சொல்லிவிட்டேன்.

அவன் சொன்னான் ”அந்தப் பையன் பென்ச்சை உடைக்கத்தான் இத்தனை நாளா ஏங்கியிருக்காம்ப்பா”.

சுந்தர்ஜி சொன்னது…

பூட்டுக்களைச் சாவிக்கேற்ப பொருத்தும் எளிய வேலைதான் பாக்கி நமக்கு ராகவன்.

உங்கள் சூழ்நிலையறிவேன்.பின்னூட்டமிட முடியாவிட்டாலும் தொடர்ந்து நீங்கள் வாசிக்கிறீர்கள் என் நான் எடுத்துக்கொள்கிறேன்.

லைஃப் பீட் மூலமாக அவ்வப்போது நைரோபியைக் காண்கிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

சரியான வார்த்தை வினோ. அடிக்கடி காணாமப் போயிடறீங்க.

உங்க கவிதை க்ளாஸ்.உங்கள மாதிரி எழுதறத விடுங்க யோசிக்கக் கூட முடியல்.

அடிக்கடி எழுதுங்க வினோ.

சுந்தர்ஜி சொன்னது…

பொருத்தமான அவதானிப்பும் அணுகலும் பாலு சார்.

நீங்க எல்லா இடுகைகளையும் வாசிக்கறது எனக்குப் பெருமையா இருக்கு.இதை அடிக்கடி சொல்றேன்.சொல்வேன்.நன்றி சார்.

சுந்தர்ஜி சொன்னது…

கொச்சுரவி!நிங்கள்க்கு தமிழ் கொறச்சு வருமோ?

நிங்கள்ட ப்ரதம ப்ரவேஸத்துக்குக் கூடுதலாயிட்டுக் களியும் நன்னியும்.

எண்ட மலையாளம் ஓக்கேயோ?அவஸ்யம் பறயணும் ரவி.

சிவகுமாரன் சொன்னது…

கைகள் அள்ளிய நீர் - வெகு நாளாய் இதன் பொருள் என்னவாக இருக்கும், இந்த வாக்கியம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எனக்குள்.
இன்று ஒரு விடை கிடைத்தது. உங்களிடம் வேறு காரணங்கள் இருக்கலாம்.
இன்று என் பையன் ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்வி கேட்காமல் ஒரு செயலை செய்யமாட்டான்.

சுந்தர்ஜி சொன்னது…

ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்வெனும் மஹாநதி. இதில் என்னால் அள்ள முடிந்தது என் கையளவுதான்.கையளவும் விரல்களிடை வழிந்து மிஞ்சுவது எதுவுமற்ற சூன்யம்தான் நாம் கற்றதாய்ச் சொல்லிக்கொள்ளும் அகந்தை.இதுதான் கைகள் அள்ளிய நீரின் பின்னணி.

கேள்விகள் எழும் இடத்தில் அதற்கேற்ற பதில் இருக்கிறதோ இல்லையோ சிந்தனை இருக்கிறது.

நிறையக் கேள்விகள் கேட்கட்டும் விவேக்ராஜ் அப்பா சிவகுமாரனிடம்,தாத்தா வரதராஜனிடம், அம்மா தேன்மொழியிடம்.

நிலாமகள் சொன்னது…

சமைக்காத காய்கனிகள், தானியங்களை நிதானமாக கண்ணைமூடி மென்று தின்று ஜீரணிப்பது போன்றதாயிற்றே ஜென் தத்துவங்கள் ... விளக்கக் கதைகள்...!

கீழ்ப்படிதல் ஒன்றையே குறிக்கோளாக்கி அண்டாவை நிரப்பவும் அள்ளியிறைக்கவுமாயிருந்த சிறுவனின் உடல், மனநோவு; தன்மேல் கவிந்த வறுமைச் சூழல்; கொண்டுவந்து சேர்த்த தகப்பன் மேல் காட்டவியலா ஒட்டுமொத்த வேகமும், உறவினரின் விடாத நெருக்கடியால் தன்னை உணர்தலை அவனுக்கு சித்திக்க வைத்திருக்கிறது. உரமேறிய தன் கைகளைக் கொண்டு இனியவன் நற்செயல்களும் செய்யக்கூடும். அடுத்த பாடத்திற்கும் தயாராகி விட்டான்!

சிவகுமாரன் சொன்னது…

நன்றி சுந்தர்ஜி . தாத்தாவிடம் கேள்விகள் கேட்கும் கொடுப்பினை எனக்கும் இல்லை என் பிள்ளைக்கும் இல்லை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கையளவும் விரல்களிடை வழிந்து மிஞ்சுவது எதுவுமற்ற சூன்யம்தான் நாம் கற்றதாய்ச் சொல்லிக்கொள்ளும் அகந்தை.இதுதான் கைகள் அள்ளிய நீரின் பின்னணி.//
very True.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...