30.9.11

ஹரிஹரனின் தர்த் கே ரிஷ்தே



(இந்தப் பாடலின் துவக்கத்திலும் முடிவிலும் ஒரு ரகசியம் இருக்கிறது. அது என்ன என்பது மற்றொரு ரகசியம். அதைப் பின்னூட்டத்தில் மட்டுமே சொல்லுவேன் ஒரு வாரத்துக்குப் பின்.)

பார்வையற்ற ஒரு யாசகனான நான் ஊரெல்லாம் உறங்கும் ஓர் நள்ளிரவில் ஆட்களற்ற ஒரு கோயிலின் வாசலில் அமர்கிறேன்.

என் அருகில் இருக்கும் அந்த நாய் சற்றுமுன் ஈன்ற தன் குட்டிகளை அரவணைத்து நாவால் நக்கி நக்கி அவற்றிற்குக் கதகதப்பூட்டிக்கொண்டிருப்பதை என் காதுகளால் உணரமுடிகிறது.எனக்கான அதன் குரலில் தன்னைப் பற்றி என்னிடம் சொல்ல அதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது.

குட்டிகளை ஈன்று பெரும் பசியிலும் தாகத்திலும் இன்றைய நாளை அது கழித்திருக்க வேண்டும். எத்தனை கொடுமை பசியின் விஷ நாக்கால் தீண்டப்படுவது என்பதை நான் நன்கறிவேன்.

என் இரவு உணவுக்கென நான் பத்திரப்படுத்தியிருந்த  அந்த காய்ந்த ரொட்டியைப் பையில் இருந்து எடுத்து அதற்கு உணவாய் அளித்தேன். நன்றி சொல்லியபடியே பசியின் ஆவலாதியை வெளிப்படுத்தியபடியே உண்டு தீர்த்தது.

மூலையில் கிடந்த வட்டிலில் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி வைக்க அதையும் குடித்து முடித்து என்னை ஒரு முறை நக்கிக் கொடுத்துவிட்டுக் குட்டிகளிடம் சேர்ந்துகொண்டு அவற்றிற்குப் பால் புகட்டத் தொடங்கியது. 

பசியும் இரவும் என் மேல் இரக்கமின்றிக் கவிழ மெதுவாய் விரிகிறது ஹரிஹரனின் தர்த் கே ரிஷ்தே. உடன் என் வயிற்றுப் பசி போல உருள்கிறது ஸாகீர் ஹுஸைனின் தபேலா.

18.9.11

மாபிலம் கோதண்டராமர்

ஒவ்வொரு தொன்மையான தலங்களையும் பார்க்கும் போது அதன் காலத்தில் நம்மைப் பொருத்திப்பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அப்படித்தான் நிகழ்ந்தது மேற்கு மாம்பலத்தில் இருக்கும் கோதண்டராமர் ஆலயத்திற்குள் நுழைந்தபோது.


அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ எடுத்துக்கோ(காசு கொடுத்துவிட்டு) என்று கூவும் சென்னையின் மாம்பலம் பகுதி வில்வ மரக் காடாக இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? முந்தைய நூற்றாண்டுகளில் இது மாபிலம் என்ற பெயரில் அதாவது மஹா குகை என்றழைக்கப்பட்டது.


மாம்பலம் என்ற பெயருக்கு இங்கு நிறைய மாந்தோப்புக்களும் அதிலிருந்து கீழே விழுந்த மாம்பழங்களுமே காரணம் என்று புருடா விடவும் மாம்பலம் காரணமாக இருந்திருக்கிறது.  


தி.நகரின் பேருந்து நிலையத்தின் பின்புறம் ஒரு கல்லெறி தூரம்-அல்லது- மேட்லி சுரங்கப்பாதையின் கீழிறங்கி இடதுபுறம் ஒரு யு எடுத்து வலது புறத் தெருவில் திரும்பி உங்களின் கேள்விக்குப் பதில் சொல்லக் காத்திருக்கும் அந்த நபரிடம் கோதண்டராமஸ்வாமி கோயில் எங்கே என்று கேட்டால் வழிகாட்டுவார். இந்தக்கோயில் அசோகமித்ரனின் ”இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ளவேண்டும்” சிறுகதையில் பாட்டுக்கச்சேரி நிகழும் இடமாக வருகிறது.


வாசலில் மொபைல் போனில் பாட்டுக்கேட்டுக் கொண்டே வேலை செய்யும் இஸ்திரி வண்டிக்காரரும் அவரின் ஸ்த்ரீயும் ஒரு புறமிருக்க துளசிமாலைகள் மணக்கும் பூக்கடை மறுபுறம். இரண்டுக்கும் நடுவே கோதண்டராமர் அருள்பாலிக்கக் கொஞ்ச இடம். அதற்குள் நான் புகுந்தேன்.


கோயிலின் வலது புறம் பழமையான அகோபில சம்ஸ்கிருதப் பள்ளியின் வேட்டி சட்டை அணிந்த மாணவர்களும் பாவாடை தாவணி அணிந்த மாணவிகளும் நாமிருப்பது சென்னையில்தானா என்ற ஆச்சர்யத்தை ஊட்ட மறக்கவில்லை.


உள்ளே நுழைந்தவுடன் கவர்வது கற்தரையும் இடது புறம் பூட்டப்பட்டிருக்கும் அழகான கற்படிகளுடன் கூடிய தெப்பக்குளமும்தான். விசேஷ நாட்களில் தெப்ப உற்சவமும் நடப்பதுண்டு என்றார் தொன்மையான ஒரு பக்தர்.


எனக்கும் என் பிள்ளையைப் போலவே பெருமாள் கோவில் என்றாலும் ஹனுமார் கோவில் என்றாலும் கடவுளுக்குச் சமமாக கோயிலின் தீர்த்தம் ரொம்பவும் பிடிக்கும். என் மூத்தவன் சொல்லுவான்.” பெருமாள் கோயிலுக்கு வரும்போது ஒரு டம்ளர் எடுத்துண்டு வரணும்பா. அது வழிய தீர்த்தம் வாங்கிக் குடிக்கணும்”.


இந்தத் தீர்த்தத்தில் என்னவெல்லாம் சேர்க்கிறீர்கள் ஸ்வாமிகளே? என்று கேட்டபோது ”கொஞ்சம் லவங்கம் கொஞ்சம் ஏலக்காய் கொஞ்சம் பச்சைக் கற்பூரம். ரெண்டு துளசி.அவ்வளவுதான்” என்றார் ஐயங்கார் ஸ்வாமிகள். அதன் கூடக் கொஞ்சம் செம்பையும் நிறைய பக்தியையும் என நினைத்துக் கொண்டேன் நான்


அருள்மிகு.அரங்கநாதர் சன்னதி-ஜெய விஜயருக்கு மத்தியில் கோதண்ட ராமர் சன்னதி-அருள்மிகு.யோகநரசிம்மர் சன்னதி-குலசேகர ஆழ்வார் சன்னதி-சேனை முதல்வர்,நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார் சன்னதி-உடையவர்,மணவாளமாமுனிகள் சன்னதி-கருடாழ்வார் சன்னதி(சன்னதியின் வெளிச்சுவரில் தெலுங்கில் வங்காயல செட்டியின் முயற்சிகள் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன)- 30 திருப்பாவைப் பாசுரங்களும் பொறிக்கப்பட்ட ஆண்டாள் சன்னதி-அரங்கநாயகித் தாயார் சன்னதி-சஞ்சீவபர்வத ஆஞ்சநேயர் சன்னதி என்று-உஸ்ஸப்பா மூச்சு விட்டுக்கறேன்- யாரையும் விட்டு வைக்கவில்லை வங்காயலச் செட்டியின் கனவு.


வலது மூலையில் மடப்பள்ளியும் இடது மூலையில் வாகனக் கிட்டங்கியும் கோயிலின் திட்டங்களைப் பூர்த்தி செய்தன. அப்புறம் பெருமாளைத் தரிசித்துவிட்டு ஏகாந்தமான அமைதியும் பின்புறம் லேசாகச் சூடும் பரவும் கற்தரையில் உட்காரும் முன் கண்ணில் பட்டது சுவாரஸ்யமான ஒரு கதையையே உள்ளடக்கிய அந்தக் கோயிலின் ஸ்தல புராணம்.


”ஸ்ரீமாபில க்ஷேத்ரம் என்றழைக்கப்படும் மேற்கு மாம்பலத்தின் பிரதான மூலவராக ஸ்ரீ பட்டாபிராமன் எழுந்தருளியிருக்க அவருடைய மடியில் சீதாப்பிராட்டி அமர்ந்திருக்க வலப்புறம் இளைய பெருமான்(இலக்குவன்) குடைபிடிக்க சிறிய திருவடியான ஹனுமான் ராமனின் திருவடிகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறார். இப்படி தமது பட்டாபிஷேகத் திருக்கோலத்துடன் சுமார் 150(நூற்றைம்பது) வருடங்களாக பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.


ஸ்ரீ ராமன் பத்ராசலத்திலுள்ள அதே திருக்கோலத்துடன் இங்கே காட்சியளிப்பதால் இத்திருத்தலம் தக்ஷிண பத்ராசலம் என்றழைக்கப்படுகிறது. பத்ராசலத்தில் திரு. ராமதாஸர் என்பவர் திருக்கோயிலைக் கட்டினார். இங்கு அவருடைய வம்சாவழியில் வந்த திரு.வெங்கடவரத தாஸர் இத்திருக்கோயிலைக் கட்டினார் என்று பெரியோர் கூறுகின்றனர்.


பின்பு 1926 ம் வருஷம் திரு. வங்காயல குப்பையச் செட்டியார் என்பவர் இத்திருக்கோயிலைப் பெரிதாக உருவாக்கி ஸ்ரீ.கோதண்டராமரையும் ப்ரதிஷ்டை செய்தார். திரு. வங்காயல குப்பையச் செட்டியார் அவர்களுக்கு நேர்வாரிசு கிடையாது.


எனவே செட்டியாரின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு அவருடைய பங்காளிகள் மெதுவாகக் கொல்லும் விஷத்தை அவருக்கு உணவில் கலந்து விட்டனர். அதை நமது ஸ்ரீ.ராமர் கனவில் வந்து கூறி விஷத்தை முறித்துவிட்டார். பின்னர் தமக்குக் கோயிலைப் பெரிதாகக் கட்டித் தரும்படி ஆணையிட்டார்.


மறுநாள் காலையில் செட்டியார் திருக்கோயிலுக்கு வந்தார். அங்கிருந்த கோயில் நிர்வாகி ப்ரா.வே.தேனுவ குப்தா வெங்கட ரங்கையா அரிதாஸர் என்பவர் நமது கோயிலைப் பெரிதாகக் கட்ட நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். 


திரு. செட்டியார் நடந்த ஸம்பவங்களை நிர்வாகி. திரு. ரங்கையாவிடம் தெரிவித்தார். நிர்வாகி மிகவும் மகிழ்ந்து ஏற்கனவேயுள்ள சிறிய திருக்கோயில் ஆகம விதிப்படி இல்லை. எனவே கட்டப்பட இருக்கிற பெரிய கோயில் ஆகம விதிப்படி கட்டவேண்டுமெனக் கேட்டுக்கொண்டு ரூ.4000த்தையும், கோயிலிலிருந்த பழைய பொருட்களை விற்றதில் வந்த ரூ.1000த்தையும் செட்டியாரிடம் கொடுத்தார்.


இதை முன்பணமாக வைத்துக்கொண்டு 1926ம் வருடம் ஜூன் 23ம் தேதி ஆரம்பித்து ஜூலை 26ம் தேதி அஸ்திவாரம் போட்டு 1927ம் வருடம் ஏப்ரல் மாதம் 30ம் தேதி பூர்த்தி செய்து ஸ்ரீவைகானஸ பகவச் சாஸ்த்ரோத்த மார்க்கத்தில் மிக விமரிசையாக நூதன ஆலய அஷ்ட பந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் செய்வித்துக் கோயிலை ஸ்ரீ.சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ந ஹனுமத் சமேத ஸ்ரீ.கோதண்ட ராம ஸ்வாமிக்கு சமர்ப்பித்தார். இந்த மஹா சம்ப்ரோக்ஷண சமயத்தில் திருநீர்மலை.ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் இங்கு எழுந்தருளி மங்களாசாஸனம் செய்துள்ளார். சுபம்.” 


இந்த ஸ்தல புராணத்தின் மொழி வழக்கம் போல ஒரு புதையல். இதைப் படித்தபின் தோன்றிய சில எண்ணங்கள்.


1. நிறைய தமிழ் மொழி வடமொழி உபயோகக் குழப்பங்கள் தெரிகின்றன.
2. பத்ராசல ராமதாஸரை யாருக்கும் தெரியாத ஒருவரைப் போல பத்ராசல ராமதாஸர் என்பவர் என்கிற அறிமுகம் ஒரு ஆச்சர்யம்.
3. வருடங்களும் மாதங்களும் ஆங்கில நாட்காட்டியைப் பின்பற்றியிருப்பது.
4. 1926ல் ரூ.5000 என்பது மிகப்பெரிய தொகை. கோயிலின் நிர்மாணத்துக்கு பெரிய தொகை செலவிடப்பட்டு மிகப்பெரிய திருவிழாவாக இது நடந்தேறியிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.
5. நம்மை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் இப்போதுள்ளவர்களைக் காட்டிலும் பிறரின் மத நம்பிக்கைகளில் குறுக்கிடாமல் இருந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் சகிப்புத் தன்மைக்கு ஒரு உதாரணம்.


மலைப்பான தகவல்களுடன் புதைந்திருந்த வரலாற்றின் பக்கங்களைப் பார்க்கும்போது எத்தனை எத்தனை தகவல்களை அழித்து கான்க்ரீட்டால் பூசி மெழுகிக்கொண்டிருக்கிறோம் என்ற கவலையும் கோபமும் வந்தது.புராதனச் சின்னங்களையும் தகவல்களையும் ஜாதி மதம் கடவுள் நம்பிக்கை நம்பிக்கையின்மை போன்ற குறுகிய வட்டத்துக்குள் போட்டுப் புதைத்துவிட்டோம். வரலாறையும் மரபையும் நம் வேர்களையும் புதிதாக உருவாக்க முடியாது என்ற அறிவு நமக்கேற்பட வெகுகாலமாகும். 


நள்ளிரவு பெய்திருந்த நல்லமழை தரையில் ஆங்காங்கே குளம் போலச் சேகரமாயிருந்தது. எங்கிருந்தோ கூட்டமாக வந்த வாத்துக்கள் க்வேக் க்வேக் என்று தமக்குள் பேசிய படியே தங்களுடைய அலகால் தண்ணீரைப் பருகியபடியிருந்தன.


இரண்டு துளசியிலைகளைப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு அதன் சுகந்தத்தில் கரைந்தபடியே தி.நகர் பேருந்து நிலைய நிறுத்தத்தில் நின்று எந்தப் பக்கமாகப் போவது என்று யோசித்தபடி இருக்கையில் ”வடக்கு உஸ்மான் சாலை வழியே போ” என்று விரலைக் காட்டினார் ஈ.வெ.ரா.பெரியார்.


1975 முதல் முப்பத்தைந்து வருடங்களாக அங்கு நின்று கொண்டிருக்கும் பெரியார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். வடக்கு உஸ்மான் சாலையின் வெள்ளத்தில் தொலைந்து போனேன்.  

16.9.11

களரி


ஒரு யுத்தம்
துவங்கும்போதே
வெளிப்பட்டு விடுகிறது
அதற்கான காரணங்கள்.
சில சமயங்களில்
பயிற்சியை
நினைவுபடுத்திக்கொள்ளவும்-
சில சமயங்களில்
தன்னை நிறுவிக்கொள்ளவும்-
வேறு சில பொழுதுகளில்
வேறு சிலருக்காகவும்-
பல நேரங்களில்
எந்தக் காரணமின்றியும்.

பாதங்களை நகர்த்துதலிலும்
பதுங்கி விலகுதலிலும்
வீச்சின் லாவகத்திலும்
உக்கிரமாக வரையப்படும்
ஓவியத்தின் வர்ணங்கள்
அத்தனை களிப்பூட்டுவதாய்
இல்லாவிட்டாலும்
யுத்தங்களுக்கான
காரணங்களைத் தேடி
றைகளில் புழுங்கியபடி
நாட்களைக் கழிக்கின்றன
பளபளக்கும் உடைவாட்கள்.

1.9.11

தரிசனம்




1.

நீ பிரிந்து செல்கையில்
எழுதிய கடிதத்தை விடவும்
துயரூட்டுகிறது
அதனடியில் எழுதாது விடப்பட்ட
வெற்றுத்தாளின் நிச்சலனம்.

2.
என்றோ வசித்த
ஒரு தெருவைக் கடப்பது
அத்தனை எளிதல்ல.
ஒரு தெருவைக் கடப்பது
சமயங்களில்
ஒரு வாழ்வைக்
கடப்பது போல.

3.

நீ எழுதுவது
மிகவும் எளிமையாய்
இருக்கிறது என்றான் அவன்.
அவன் சொன்னதை
என்னால் எளிதில் புரிந்து
கொள்ளமுடியவில்லை.

4.

சிறைக்குள்
இருப்பவனைப்
பார்த்து வரப் போனேன்.
கம்பிகளுக்குப்
பின்னே நானா? அவனா?

-நன்றி- கல்கி

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...