3.11.13

பரஸ்பர சாபங்கள்


கௌதமாரால் சபிக்கப்பட்ட அகலிகை, ராமனின் பாதங்கள் பட்டு சாபவிமோசனம் பெற்றது வரையிலான இதிஹாசம் நமக்குத் தெரியும். அகலிகை கௌதமருக்குக் கொடுத்த சாபம் அநேகர் கேள்விப் பட்டிராதது. சமஸ்க்ருதத்தில் உள்ள திருசூலபுர மாகாத்மியத்தில் இல்லாது, தமிழில் உள்ள திருச்சுழித் தல புராணத்தில் மட்டும் கிடைப்பது. அந்தப் புராண வரலாறு இதுதான்.

ந்திரன் கௌதமரைப் போல உருமாறி, அவர் ஆச்ரமத்தில் இல்லாதபோது அகல்யையை அணுகி அவளுடன் இன்புற்றிருக்குங் கால், கௌதமர் ஆச்ரமம் திரும்பி விட்டார். இந்திரன் பூனை வடிவு கொண்டு வெளிப்படவே, விஷயமுணர்ந்த முனிவர் அவனைச் சபித்தார். பிறகு தன் மனையாளையுங் கல்லாய்ப் போகுமாறு சபித்தார். 

இந்திரன் தன் கணவனென்றே கருதி ஏமாறித் தழுவியதை யுணராது முனிவர் வெகுள்வதைக் கண்ட அகல்யை, "அறிவற்ற முனியே! நிலமையையுணர்ந்து அதற்கேற்ற பரிகாரஞ் செய்யாது இங்ஙனம் சபித்தீரே! எப்போது எவ்வாறு எனக்கு விமோசனம்?" என்று வினவ, "ஸ்ரீராமாவதாரத்தின் போது பரந்தாமனின் பாததூளியின் பரிசத்தால் உனக்கு விமோசனம் உண்டாகும்" என்று முனிவர் அருளினார். அகல்யை உடனே கல்லாய்ச் சமைந்தாள்.

முனிவர் அங்கிருந்து அகன்று தமது தினசரியையில் ஈடுபடுங்கால் அவரது புத்தி நிலைகொள்ளாது பலவாறு தடுமாறத் தொடங்கியது. அத்தடுமாற்றம் மேன்மேலும் அதிகமாவதைக் கண்ட முனிவர் சிறிது ஆலோசித்தலும் அதன் காரணம் அவருக்கு விளங்கியது. 

உண்மையில் குற்றமறியாத் தன் மனையாளைத் தாம் சபித்தபோது, தம்மை தபஸ்வினியான அவள் "அறிவற்ற முனியே" என்றழைத்ததே சாபம் போலாயிற்று என்றுணர்ந்து, அதற்குப் பரிகாரம் ஈசனது தாண்டவ தரிசனமொன்றேயாகும் என்றறிந்து, கௌதமர் சிதம்பரஞ் சென்றார். 

அங்கே "திருச்சுழியலில் ஆடல் காண்பிப்போம்" என்னும் அசரீரியைக் கேட்ட முனிவர் அவ்வாறே அத்தலத்தை நாடிச் சென்றார். சுழியற்பதியைக் கண்டதுமே கௌதமரின் உள்ளம் தெளியத் தொடங்கியது. அத்தலத்தில் அவர் நீண்ட காலம் தவத்திலாழ்ந்தார். இறைவனும் அவரது தவத்திற் கிரங்கி, மார்கழித் திருவாதிரை யன்று தனது திவ்யானந்த தாண்டவக் கோலத்தை அவருக்குக் காண்பித்தருளினான். கௌதமர் ஈசனை மனமாரத் துதித்து மகிழ்ந்து விடை பெற்றுச் சென்றார்.

உரிய காலத்தில் அகல்யையும் ஸ்ரீராமனது பாத தூளியால் மீண்டும் கன்னிவடிவுற்று கௌதமரை வந்தடைந்தாள். முனிவர் மகிழ்ச்சியுடன் அவளை நோக்கி, "கண்ணுதலின் மணக் கோலத்தை நாமிருவரும் கண்டு களி கூர்ந்து இல்லறந் தொடங்குவோம்" எனப் பகர்ந்து, அகல்யையுடன் சுழியலுற்றுத் திருமேனிநாதனை வேண்ட, கருணாநிதியாம் சிவபெருமான் அவ்வாறே அவ்விருவர்க்கும் தனது திருமணக் கோலக்காட்சியை அளித்தருளினான். கௌதமர் ஈசனைப் புகழ்ந்து பூஜித்து விடைபெற்று, இடர் யாவும் விலகப் பெற்றவராய்த் தமது மனையாளுடன் என்றும் போல் அமைதியாய்த் தவவாழ்வு தொடர்ந்தார்.

ஸ்ரீ ரமணாச்ரமத்திலிருந்து கடிதங்கள் - பாகம் 2ல் 14.01.1949 பக்கம் 257ல் 85ஆவது கடிதமாய்த் தொகுக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் ரமண மகர்ஷி, தன்னிடம் சந்தேகம் கேட்கும் ஒரு பக்தருக்கு, இப்புராணத்தைப் பற்றிக் கூறி இப்படி முடிக்கிறார்.

'கௌதமருக்கு சாபம் கிடைத்த கதையொன்று இருக்கிறதா? நான் இதுவரை கேட்டதில்லை' என்கிறார் சூரிநாகம்மா.

"இந்த பரஸ்பர சாபக்கதை திருச்சுழித் தலபுராணத்தில் மாத்திரம்தான் இருக்கிறது. ராமாயணத்தில், ஜனகரின் சபையில் புரோகிதராக இருந்த சதானந்தர், தன தாயார் அகலிகை தந்தையின் சாபத்தினால் மனோதைர்யமிழந்து தன் நிலை தெரியாமல் விழுந்து கிடக்க, ராமரின் பாததூளியினால் சின்மய ஸ்பூர்த்தியடைந்து ராமனைத் துதித்து, தன் தகப்பனாரிடம் திரும்பிச் சென்ற விஷயத்தை விசுவாமித்திரர் சொல்லக் கேட்டு ஆனந்தப் பட்டாரென்று சொல்லியிருக்கிறதே தவிர இதெல்லாம் அதிலிலில்லை" என்றார் பகவான்.

'ஆனால், அகலிகை கல்லாய் இருந்தாள் என்பது அவளுடைய மனநிலையைத்தான் குறிக்கிறதா?' என்றொருவர்.

"ஆமாம், கல்லானாள் என்பது மனதிற்கு அல்லாமல் பின்னே சரீரத்திற்கா? சரீரம் கல்லாய் மாறிக் காட்டில் கிடந்ததென்றும், ராமர் கால் வைத்துக் கல்லை ஸ்திரீயாக மாற்றினாரென்றும், சாதாரண ஜனங்கள் நினைக்கிறார்களே தவிர அது நடக்கிற காரியமா? மனம் ஆத்மா ஞானத்தை மறந்ததோடில்லாமல், ஒன்றும் தோன்றாமல் கல்போல் ஜடத்துவம் அடைந்ததென்று அர்த்தம். மகா புருஷனின் தரிசனத்தினால் அந்த ஜடத்துவம் விலகியது. அவள் மகா தபஸ்வினியானதினால் உடனே சின்மய ஸ்பூர்த்தி அடைந்து ஸ்ரீராமரை தத்வமயனாக அறிந்து துதித்தாள். இந்த சூக்ஷ்மார்த்தம் ராமாயணத்தில் இருக்கிறது. ஸ்ரீராமர் கௌதமாச்ரமத்தில் அடி வைத்ததும் அகலிகையின் மனமலர் விரியலாயிற்றாம்" என்றார் பகவான்.

கவித்துவம் சொட்டும் இந்த இன்னொரு பக்க சாபக் கதையினால், நம் மனங்களின் அறியாமையின் மொட்டுக்களும் மலர்ந்து மணக்கின்றன என்பதும், கல்லான நம் மனங்களிலிருந்து கதையாய் உறைந்திருக்கும் அகலிகை மீண்டும் விமோசனம் பெறுகிறாள் என்பதும்  நிதர்சனம்.  

4 கருத்துகள்:

sury siva சொன்னது…

இது போன்ற புராணம் நான் முதல் தடவையாக கேட்டு இருக்கிறேன்.

கல்லான அகலிகையை திரும்பவும் உயிர்ப்பிப்பத்தின் கூடார்த்தத்ததை எடுத்துச்சொல்லும் விதம் மிகவும் நயமாக இருக்கிறது.

இருப்பினும், அகலிகை பற்றி இன்னுமொரு கதையும் வழக்கில் இருக்கிறது.

தங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லவில்லையே என்று நினைக்க மாட்டீர்கள்.

நான் சொல்லி இருக்கிறேன். நீங்கள் தான் கேட்கவில்லை.

சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

நன்றி சுப்பு தாத்தா.

அகலிகை சார்ந்த கதைகள் தமிழிலேயே புதுமைப்பித்தன் தொடங்கி எம்.வி.வி., ச.து.சு.யோகி தொடர பிரபஞ்சன் முடிய ஏராளம். இது புதுக் கோணம்.யாரும் பாராதது.கேளாதது.

தீபாவளி மட்டுமல்ல எல்லாப் பண்டிகைகளையும் நான் அடுத்த தலைமுறை கையில் ஒப்படைத்து நாளாகிறது. நானோ எல்லா நாட்களையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

சொல்லாத வாழ்த்துக்களையும் கேட்டபடிதான் இருக்கிறேன்.

G.M Balasubramaniam சொன்னது…

அகலிகை கதை ஒரு புதுக் கோணத்தில்.... பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கவித்துவம் சொட்டும் இந்த இன்னொரு பக்க சாபக் கதையினால், நம் மனங்களின் அறியாமையின் மொட்டுக்களும் மலர்ந்து மணக்கின்றன என்பதும், கல்லான நம் மனங்களிலிருந்து கதையாய் உறைந்திருக்கும் அகலிகை மீண்டும் விமோசனம் பெறுகிறாள் என்பதும் நிதர்சனம்.

கவித்துவம் மிக்க அழகான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...